Post has attachment
பகவத்கீதை உரைக்கப்பட்டச் சூழ்நிலை

பெருமளவில் வெளியிடப்பட்டு படிக்கப்பட்டுள்ள பகவத் கீதை, உண்மையில் மஹாபாரதத்தின் (பழங்கால உலக வராலற்றைப் பற்றி சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இதிகாசத்தின்) ஒரு பகுதியாகும். மஹாபாரதம், தற்போதைய கலி யுகம் வரை நடைபெற்ற எல்லா நிகழ்ச்சிகளையும் விளக்குகின்றது. இந்த யுகத்தின் ஆரம்பத்தில், ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையை தனது நண்பனும் பக்தனுமான அர்ஜுனனிடம் கூறினார்.

பகவத் கீதை, மனிதர்கள் அறிந்த தத்துவ, மத உரையாடல்களில் மிகச் சிறந்ததாகத் திகழ்கிறது. திருதராஷ்டிரரின் நூறு மகன்களுக்கும் அவர்களது சகோதரர்களான பாண்டுவின் மகன்களுக்கும் இடையே நடைபெற்ற மாபெரும் போருக்குச் சற்று முன்பு இஃது உரைக்கப்பட்டது.

திருதராஷ்டிரரும் பாண்டுவும் குரு வம்சத்தில் பிறந்த சகோதரர்கள். அந்த வம்சம் பூலோகம் முழுவதையும் ஆட்சி செய்த பரத மன்னரிடமிருந்து வருவதாகும். எனவே, இக்காவியம் மஹபாரதம் என்று பெயர் சூட்டப்பட்டது. மூத்த சகோதரரான திருதராஷ்டிரர் குருடராகப் பிறந்த காரணத்தினால், அவருக்குச் சேர வேண்டிய அரியணை இளைய சகோதரரான பாண்டுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாண்டு இளம் வயதில் மரணமடைந்ததால், அவரது ஐந்து குழந்தைகளும் — யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் — அப்போது மன்னராகப் பொறுப்பெடுத்திருந்த திருதராஷ்டிரரின் பாதுகாப்பின் கீழ் வந்தனர். இதனால் திருதராஷ்டிரரின் மகன்களும் பாண்டுவின் மகன்களும் ஒரே விதமான செல்வச் செழிப்புடன் வளர்க்கப்பட்டனர். இருவருமே தேர்ச்சி பெற்ற துரோணரிடம் போர்க் கலையைக் கற்றனர், பாட்டனார் பீஷ்மரிடமிருந்து அறிவுரைக்களைப் பெற்றனர்.

இருப்பினும், திருதராஷ்டிரரின் மகன்கள், குறிப்பாக துரியோதனன் பாண்டவர்களை வெறுத்தான், பொறாமையுடன் இருந்தான். குருடராகவும் பலவீன மனமுடையவராகவும் திகழ்ந்த திருதராஷ்டிரர், பாண்டுவின் மகன்களுக்குப் பதிலாக தனது மகன்களே அரியணை ஏற வேண்டுமென விரும்பினார்.

எனவே, துரியோதனன் திருதராஷ்டிரரின் சம்மதத்துடன் பாண்டுவின் இளம் மகன்களைக் கொல்லத் திட்டங்கள் தீட்டினான். சித்தப்பா விதுரர் மற்றும் பகவான் கிருஷ்ணரின் உதவியினால் மட்டுமே பாண்டுவின் மகன்கள் அத்திட்டங்களிலிருந்து தங்கள் வாழ்வைக் காக்க முடிந்தது.

பகவான் கிருஷ்ணர் சாதாரண மனிதரல்ல — அவரே முழுமுதற் கடவுள். அவர் இப்பூமிக்கு இறங்கிவந்து மற்றொரு வம்சத்தின் இளவரசரைப் போல வசித்து வந்தார். இக்கதாபாத்திரத்தில், பாண்டுவின் மனைவியும் பாண்டவர்களின் தாயுமான குந்தி (பிருதா), அவரின் அத்தை. எனவே, உறவினர் என்பதாலும், தர்மத்தை நித்தியமாகக் காப்பவர் என்பதாலும், கிருஷ்ணர் பாண்டுவின் தர்மப் புதல்வர்களுக்குச் சாதகமாக இருந்து அவர்களைக் காத்தார்.

இறுதியில், தந்திரக்காரனான துரியோதனன் பாண்டவர்களை சூதாடும் படிச் சவால் விட்டான். விதிவசத்தால் நிகழ்ந்த அப்போட்டியில், துரியோதனனும் அவனது சகோதரன்களும், கற்பும் பக்தியும் நிறைந்த பாண்டவர்களின் மனைவியான திரௌபதியை கையகப்படுத்தினர். மேலும், இளவரசர்களும் மன்னர்களும் நிரம்பிய அந்த அரசவையில் அவளை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்த முயன்றனர். தெய்வீகமான முறையில் குறுக்கிட்ட கிருஷ்ணரால் அவள் காக்கப்பட்டாள். ஆனால் வஞ்சகமாக நடைபெற்ற அந்த சூதாட்டத்தினால் பாண்டவர்கள் தங்கள் அரசை இழந்து பதிமூன்று வருடங்கள் நாட்டை விட்டு விலகி வாழ நேர்ந்தது.

வனவாசம் முடிந்து திரும்பிய பாண்டவர்கள் உரிமையுடன் தங்களது நாட்டைத் திருப்பி தரும்படி துரியோதனனிடம் கேட்டனர், ஆனால் அவனோ கண்மூடித்தனத்துடன் அதற்கு மறுத்தான். இளவரசர்கள், 'ஆட்சி செய்ய வேண்டும் ' என்ற கடமைக்காக, ஐந்து பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்களாவது கொடுக்குமாறு வேண்டினர். ஆனால் "ஊசி நுழையும் அளவு இடம் கூட அளிக்க மாட்டேன்" என்று கர்வத்துடன் உரைத்தான் துரியோதனன்.

இதுவரை நடந்த அனைத்தையும் பாண்டவர்கள் பொறுமையுடன் தாங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது போர் தவிர்க்க முடியாததாயிற்று.

உலகிலுள்ள அரசர்கள் இரு பிரிவாக பிரிந்து, சிலர் பாண்டவர் பக்கமும் வேறு சிலர் கௌரவர் பக்கமும் சென்றனர். கிருஷ்ணரே பாண்டு மைந்தர்களின் தூதராக திருதராஷ்டிரரின் சபைக்குச் சென்று அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவரது அறிவுரை நிராகரிக்கப்பட்டபோது போர் நிச்சயமாயிற்று.

உயர்ந்த நீதிக் கோட்பாட்டின்படி வசித்த பாண்டவர்கள் கிருஷ்ணரை பரம புருஷ பகவானாக அங்கீகரித்தனர்; ஆனால் திருதராஷ்டிரரின் தீய மகன்களோ அவரை அவ்வாறு அங்கீகரிக்கவில்லை. இருப்பினும், விரோதிகள், நண்பர்கள் என்ற பாகுபாடின்றி அவரவர் விருப்பப்படி போரில் பங்குபெற கிருஷ்ணர் ஒரு வழியை முன்வைத்தார்; அதாவது, தனிப்பட்ட முறையில் கிருஷ்ணர் போரில் ஈடுபடப் போவதில்லை — ஆனால், அவரின் படையை விரும்புவோர் அதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம், மறுபுறத்தில் அவர் ஆலோசகராகவும் உதவியாளராகவும் விளங்குவார். அரசியல் நிபுணனான துரியோதனன் ஆயுதம் தாங்கிய கிருஷ்ணரின் படையை உற்சாகத்துடன் எடுத்துக் கொண்டான், அதே உற்சாகத்துடன் பாண்டவர்கள் கிருஷ்ணரை ஆலோசகராக ஏற்றுக் கொண்டனர்.

இவ்வாறு, கிருஷ்ணர் புகழ் பெற்ற வில்லாளியான அர்ஜுனனின் தேரை ஓட்டும் சாரதியானார். இரு படைகளும் அணிவகுக்கப்பட்டு, போரிடத் தயாரக இருந்த போது, திருதிராஷ்டிரர் தனது காரியதரிசியான சஞ்ஜயனிடம், "அவர்கள் என்ன செய்தனர்?" என்று ஏக்கத்துடன் கேட்க, பகவத் கீதை ஆரம்பமாகிறது.

காட்சி இப்போது அமைக்கப்பட்டு விட்டது. தற்போது, இந்த மொழிபெயர்ப்பு மற்றும் பொருளுரை குறித்த ஒரு சிறு குறிப்பு மட்டும் தேவைப்படுகிறது.

பகவத் கீதையின் பெரும்பாலான உரையாசிரியர்கள், கிருஷ்ணரை ஒதுக்கிவிட்டு தங்களது சுயக் கருத்துகளையும் தத்துவங்களையும் வடிவமைத்துக் கொள்கின்றனர், மஹாபாரத வரலாற்றை ஒரு கட்டுக் கதையாகக் கருதுகின்றனர், மேலும் கிருஷ்ணரை ஏதோவொரு அறிவாளியின் கருத்தை விளக்குவதற்கான கவிதைப் பொருளாக அல்லது மிஞ்சிப் போனால் ஒரு வரலாற்று நபராக ஏற்றுக் கொள்கின்றனர்.

ஆனால் கீதையின் வார்த்தைப்படி, கிருஷ்ணர் என்னும் நபரே பகவத் கீதையின் சாரமும் இலக்குமாவார்.

இப்புத்தகத்தின் மொழிபெயர்ப்பும் அதனைத் தொடர்ந்து வரும் பொருளுரையும் இதனைப் படிப்பவர்களை கிருஷ்ணரை நோக்கி இட்டுச் செல்லும், விலகி அல்ல. எனவே, பகவத் கீதை உண்மையுருவில் தன்னிகரற்றது. அதுமட்டுமின்றி, முரண்பாடுகள் ஏதுமின்றி எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதாக இருப்பதாலும் இது சிறப்பு வாய்ந்தது. கீதையைப் பேசுபவரும் அதன் இறுதிக் குறிக்கோளும் கிருஷ்ணரேயாதலால், இந்த வெளியீடு மட்டுமே இம்மாபெரும் சாஸ்திரத்தை தெளிவாக வழங்கும் விளக்கவுரையாகும்.

— பதிப்பகத்தார்
Photo

Post has attachment
பகவத் கீதை உண்மையுருவில்

சமர்ப்பணம்

வேதாந்த தத்துவத்திற்கு
"கோவிந்த பாஷ்யம்" எனும் அருமையான
விளக்கவுரை வழங்கிய
பலதேவ வித்யாபஷணருக்கு
சமர்ப்பணம்
Photo

Post has attachment
Wait while more posts are being loaded