Profile cover photo
Profile photo
Selvakumar selvu
2,229 followers
2,229 followers
About
Posts

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகாக அந்தத் தோழியைச் சந்தித்தேன். பள்ளியில் நான்கைந்து வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிகழும் எதிர்பாராத சந்திப்புகளால் ஏற்படும் இனிய அதிர்ச்சிகள், நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு அவரது மன முதிர்ச்சியைக் கண்டு ஆச்சர்யத்துடன் கேட்டேவிட்டேன்.

” ஸ்கூல்ல படிக்கும்போது அவ்ளோ முட்டாள்தனமா இருந்த பொண்ணா இவ்ளோ மெச்சூர்டா ஆகிருச்சு? நம்பவே முடிலை” என்றேன்.

“ஆமாம்ல. அப்பல்லாம் உன் மேல பயங்கர க்ரஷா இருந்தேன்ல” என்றாள்.

நான் நீண்ட நாட்களுக்கும் முன்பாக எழுத ஆரம்பித்து முடிக்காமல் ட்ராப்டில் வைத்திருந்த “நான் ஏன் சிங்கிளாகவே இருக்கிறேன்?” என்ற பதினாறு பக்கக் கட்டுரையை எழுதத் துவங்கினேன்.
Add a comment...

எனக்கு நெருக்கமான பெண் நண்பர் அவர். ஒருவகையில் உறவினரும் கூட. என் மீது அதீத பிரியம் வைத்திருப்பவர் என்று கூட சொல்லலாம். அடிக்கடி விழாக்களில், உறவினர் வீடுகளில் சந்தித்துப் பேசிக் கொள்வது வழக்கம். எனக்குமே அவர் மேல் ஒரு ப்ரியம் இருப்பதாகத்தான் தோன்றியது. ஆனாலும் அதைக் குறித்து எதுவும் பேசிக் கொள்வதில்லை.

சில தினங்களுக்கு முன்பு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசிவிடுவது என்று தீர்மானித்து, உரையாடலின் இடையே “ என் மேல உனக்கு ஒரு க்ரஷ் இருக்குதான?” என்று கூறிவிட்டு இதயம் படபடக்க அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

” அப்டிலாம் ஒன்னும் இல்லை. நீ எத வச்சு அப்டி சொல்ற? நான் எப்பவாச்சும் அப்டி நடந்திருக்கனா?” என்றார்.

“ ஓ, சாரி. நீ பேசுறத வச்சு சின்ன குழப்பம். நான் அப்டி இருக்குமோன்னு நினைச்சுட்டேன். சரி விடு” என்றேன்.

எதையோ கேட்க வாயெடுத்தவர் மற்றொரு உறவினர் இடையில் டீ-ஆத்த வந்ததால் பின்பு அந்த உரையாடல் அப்படியே தடைபட்டுப் போய், பின் அன்றைய தினத்தில் நாங்கள் தனியாகப் பேசிக் கொள்ளவே முடியவில்லை.

எனக்கு ஒரே வெட்கமாக இருந்தது. சரி, இதெல்லாம் சகஜம் என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.

நேற்று மாலை அந்த அம்மணி போன் செய்து “ ஆமா, எதுக்கு அப்டி கேட்ட? நான் எப்ப அப்டி நடந்துக்கிட்டேன்?” என்றார்.

“ அட விடு, இதனால என்ன இருக்கு. அதான் கொழப்பம்னு சொன்னேனே?”

“ இல்ல, நான் எப்பவும் உங்கிட்ட கோபப்பட்டு சண்டை போட்டதா நினைவே இல்லையே. எப்டி அப்டி சொல்லலாம்?”

“ கோவப்பட்டான்னு யார் சொன்னா?”

“ நீ தான எனக்கு உன் மேல ஒரு க்ரஷ் இருக்குன்னு சொன்ன? க்ரஷ்னா கோபம்தான?” என்றதும் நான் அழைப்பதைத் துண்டித்துவிட்டு ஒரு ஆழ்ந்த பெருமூச்சினை இழுத்துவிட்டுக் கொண்டேன்.

Add a comment...

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த நாடகத்தினைப் பார்த்தேன். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இருக்கலாம்.

அம்மாவிடம், " ஏம்மா, 2014 லேயே இந்த ஹீரோயின் கர்ப்பமா இருந்துச்சே, இப்பவும் அப்டியே கர்ப்பமா இருக்கறதா காட்டுறாங்க. இது ரண்டாவது குழந்தையா ?" என்றேன்.

" இல்ல, அதே குழந்தைதான். ஏன் கேக்குற? "

" ரெண்டு வருஷமாவா ஒருதங்க கர்ப்பமா இருப்பாங்க; என்ன லாஜிக் இது!? " என்று நக்கலாகச் சிரித்தேன்.

" ஒரு நாளைக்கு அரை மணி நேரம் தான நாடகம் வருது. அப்போ பத்து மாசம் ஆக எத்தனை வருஷம் ஆகும்னு கணக்கு போட்டுக்க" என்றார்.

நாடகம் எடுப்பவர்களை விடவும் அதனை தொடர்ந்து பார்ப்பவர்கள் ஒரு லாஜிக் உருவாகி சமாதானம் ஆகிவிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

Add a comment...

செல்போன் கேமராக்கள் வந்த காலத்திலிருந்தே குறும்படங்களை எடுத்து, என்னையும் சார்ந்தோரையும் டார்ச்சர் செய்து தன்னை ஒரு குறும்பட இயக்குனர் என்று கூறிக் கொள்ளும் நண்பன் அவன்.

சமீபமாக என்னிடம் ஒரு ஐடியா கேட்டிருந்தான். அதாவது, பழைய படங்களில் எல்லாம் விஷம் என்று எழுதி வைத்திருக்கும் பாட்டிலில் இருக்கும் திரவத்தைக் குடித்துவிட்டுத் தற்கொலை செய்து கொள்கிற காட்சியையே புதுவிதமாக மாற்றி எழுதித் தர முடியுமா என்று கேட்டிருந்தான்.

நான் பார்த்த சில பழைய படங்களில் ஹீரோயினுக்கோ, ஹீரோவின் தங்கைக்கோ திடீரென தற்கொலை செய்து கொள்ளவேண்டிய நிர்பந்தம் உருவாகும். உடனே சமையலறைக்குச் சென்றால், அங்கே விஷம் என்று சிவப்பு நிறத்தில் எழுதி வைக்கப்பட்ட பாட்டில் இருக்கும். அதை எடுத்து, மூடியைத் திறந்து, வாயில் ஊற்றுகிற சமயமாகப் பார்த்து யாராவது ஒருவர் வந்து தற்கொலையைத் தடுத்து நிறுத்திவிடுவார்கள்.

நான் என் நண்பனுக்குச் சொன்ன காட்சியின் படி, ஹீரோவும், ஹீரோயினும் காஃபி குடித்தபடியே மிக மகிழ்வாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். பேச்சின் இடையில், திடீரென சண்டை உருவாகி, அது ஹீரோயினின் தற்கொலை எண்ணத்தைத் தூண்டும் அளவுக்கு வளர்ந்துவிடும். அந்த நண்பன் என்னிடம் அதே பழைய - விஷம் என்று எழுதப்பட்ட - மேட்டர் காட்சியில் வர வேண்டும் என்றும், ஆனால், புதுமையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தபடியால், ஹீரோயின் கோபமாக அழுது அரற்றிக் கொண்டு, காஃபி கப்புடன் வெகு வேகமாக தனது பெட்ரூமிற்குச் சென்றுவிடுவாள்.

தன் கையில் வைத்திருந்த காஃபி கப்பில் வெள்ளைப் பேப்பர் ஒன்றை ஒட்டிக் கொண்டு இரண்டு நிமிட இடைவெளியில் திரும்பி வரும் ஹீரோயின், ஹீரோவின் முன்பாக ஆக்ரோஷமாக நின்று கொண்டு, சிவப்புக் கலர் மார்க்கர் பேனாவில் அந்தக் காஃபி கப்பில் ‘விஷம்’ என்று எழுதுவாள். அதைப் பார்த்து ஹீரோ அதிர்ச்சியாக எழுந்து வருகிற போது ஹீரோயின் வாயில் நுரை தள்ளி கீழே விழுந்திருப்பாள்.

சரி, பழைய படமென்றால் விஷம் என்று எழுதப்பட்டிருக்கும் பாட்டிலைத் தட்டிவிட்டால் ஹீரோயின் காப்பாற்றப்பட்டுவிடுவார். இதில் எப்படிக் காப்பாற்றுவது? ஹாஸ்பிட்டலுக்கு எல்லாம் போகக்கூடாது. அதாவது அந்தத் தற்கொலை மேட்டர் வெளியில் யாருக்கும் தெரியாத ரகசியமாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.

என்ன செய்வது என்ன செய்வது என்று யோசிக்கும் ஹீரோ தன் கம்ப்யூட்டரை ஆன் செய்து சில தேடல்களைச் செய்வார். கீழே கிடக்கும் ஹீரோயினோ இன்னும் ஐந்து நிமிடத்தில் வெடித்துவிடும் டைம் பாமைப் போல சாவின் எல்லைக்கே சென்றிருப்பார். ஹீரோவின் பதட்டமும், ஹீரோயினின் கடைசி நிமிடங்களும் மாற்றி மாற்றிக் காட்டப்பட திடீரென ஹீரோவுக்கு ஒரு ஐடியா உருவாகும்.

உடனே ஹீரோயினின் பெட்ரூமிற்கு ஓடிப் போய் ஒரு பேப்பரைக் கிழித்துக் கொண்டுவந்து, அதே காஃபி கப்பில் ‘விஷம்’ என்று எழுதியிருக்கும் பேப்பரின் மேல் ஒட்டி ‘காஃபி’ என்று எழுதிவிடுவார். இப்பொழுது ஹீரோயின் விஷம் குடித்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் பழைய சண்டையையோ, அல்லது அன்பையோ பொழியத் தயாராகிவிடுவார்.

நான் கதையைச் சொல்லி முடித்ததும் இனிமேல் என்னிடமும் சார்ந்தோரிடமும் தான் எடுக்கும் குறும்படங்களைக் காட்டி டார்ச்சர் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டுக் கிளம்பிவிட்டான்.
Add a comment...

ஃபேன்டசி கதைகள் புத்தகத்திற்குக் கிடைத்திருக்கும் இன்னுமொரு விமர்சனம்.

சூரியன் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் செல்வக்குமாரின் ஃபேண்டஸி கதைகள் படித்தேன். நண்பர் ஹரீஷ் கேட்டது போல புத்தகத்தில் எழுத்தாளரின் பெயர் ஏன் ‘செல்வு@selvu’ என்றிருக்கிறது என்று புரியவில்லை. எழுத்தாளரின் பெயர் என்பது கம்பீரமாக இருக்க வேண்டாமா ? எனக்குப் பொதுவாக குழந்தைகளுக்கு கதை சொல்ல தெரியாது. என் குழந்தைக்கு இதுவரை நான் ஒரு கதை கூட சொன்னது கிடையாது. செல்வாவின் புத்தகத்தை படித்தபிறகு இனி அந்த கவலையில்லை என்று தோன்றுகிறது. புத்தகம் எல்லா தரப்பினருக்குமானது என்றாலும் கதையில் வரும் பல விஷயங்களும் குழந்தைகளின் உலகத்தை நினைவூட்டுகிறது. ஒரு சின்ன இடத்தில் கூட விரசமோ, இரட்டை அர்த்தமோ இல்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படியொரு புத்தகம் படிக்கிறேன். பெரும்பாலான கதைகளில் ஒரு அதிசயப்பொருள் அல்லது அதிசய சக்தி வருகிறது. உதாரணத்திற்கு, ஒருமுறை ஏறி இறங்கினால் உயரம் கூட்டும் ராட்டினம், தொலைக்காட்சி தொகுப்பாளரின் நகையை கவரும் காந்தம், கரப்பான்களை கண்டாலே அடித்துக் கொல்லும் சுத்தியல் :), நிழலை தின்கிற ஆடு இப்படி ஏதாவது ஒன்று வருகிறது. அந்த அதிசிய பொருளையோ சக்தியையோ தவறாக பயன்படுத்தினால் பேக்ஃபயர் ஆகிறது. கதையினூடே நீதி போதனையும் செய்கிறார் செல்வா. கதை மாந்தர்கள் செய்யும் சின்னச் சின்ன தவறுகளுக்கு சின்னச் சின்ன தண்டனைகள் கிடைக்கின்றன. ஒரு கதையில் ஒரு நபர் அடிக்கடி திரைப்படங்களை டவுன்லோட் செய்து பார்க்கிறார். அப்படி பார்க்கும்போதெல்லாம் அவரிடமிருந்து நூற்றியிருபது ரூபாய் காணாமல் போய்விடுகிறது. எழுத்துநடையில் அவ்வப்போது அராத்துவின் தற்கொலை கதைகளின் விளிம்புவரை தொட்டுவிட்டு வருகிறார். இரண்டு நாற்காலிகள் இருந்தன. அவை ஒவ்வொன்றிற்கும் நான்கு கால்கள் என்றெல்லாம் எழுதி அச்சமூட்டுகிறார். செல்வாவின் எழுத்து ஒரு வகையான படைப்பாற்றல் என்றால் அதற்கு கதிர் வரைந்துள்ள ஓவியங்கள் இன்னொரு கோண படைப்பாற்றல். இருவருமாக சேர்ந்து நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
Add a comment...

பள்ளிக்கால நண்பன் அவன். பழைய டூ-வீலர் ஒன்றினை வாங்குவதற்காக என்னையும் துணைக்கு அழைத்துச் சென்றிருந்தான்.

போகும்போதே என்னிடம், “ வண்டியை நான் நல்லா செக் பண்ணிட்டேன், சூப்பரா இருக்கு. ஒரு 30 லிருந்து 35 வரைக்கும்னா தாராளமா வாங்கலாம். எவ்ளோ சொல்றாங்கன்னு தெரிலை. நீ எதுக்கும் வண்டில இல்லாத கொறையெல்லாம் சொல்லிட்டே இரு. அப்பத்தான் அவுங்க எறங்கி வருவாங்க. என் பட்ஜெட் 30 ஆயிரம். அதுக்குக் கீழ எவ்ளோ கொறைச்சாலும் கொறையற அமவுண்ட்ல உனக்குப் பாதி குடுத்துடறேன். உன் திறமைய இதுல காட்டு” என்று சொல்லித்தான் கூட்டிச் சென்றான்.

” எனக்கு பைக்கு பத்தி பெருசா ஒன்னும் தெரியாதேடா? ஓட்டுறதே தாறுமாறாத்தான் ஓட்டுவேன்” என்றேன்.

“ அதெல்லாம் எனக்குத் தெரியாது. அதுமில்லாம கொறை சொல்றதுக்கெல்லாம் வண்டியப் பத்தி தெரியனும்னு அவசியமில்லை. இல்லாத கொறயெல்லாம் சொல்லி அடிச்சு விடு. பாத்துக்கலாம்.”

வண்டியை விற்பதாக இருந்தவரின் வீட்டை அடைந்தோம். நீண்ட நேரம் பேரம் பேசியும் அவர் 33 ஆயிரத்துக்குக் கீழாக வருவதாகத் தெரியவில்லை. இவன் வேறு 30 ஆயிரத்துக்கும் கீழே போனால் ஆளுக்குப் பாதி என்று ஆசை காட்டியிருந்தபடியால் நானும் என் இஷ்டத்துக்கு “டயர் மாத்தனும், கீர் பாக்ஸ் சரியா வேலை செய்ய மாட்டேங்குது, மைலேஜ் கம்மியாதான் கெடைக்கும் போல” என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். அவர் எல்லாவற்றிற்கும் ஆமாம் தம்பி என்றார். ஆனால், விலையில் மாற்றமில்லை என்பதில் உறுதியாக இருந்தார்.

நான் இப்படிக் கூட ஒரு குறை கண்டுபிடித்தேன். ”சைடு மிரர்ல ’objects in the mirror are closer than they appear’ னு வர்றதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குங்க”. அவர் அதையும் பார்த்துவிட்டு ஆமாம் தம்பி என்றார்.

என் நண்பனுக்கு வண்டியை விட்டுவிட்டு வர விருப்பமில்லை. கடைசியாக ஒரு ஐநூறு ரூபாயையாவது குறைப்பதற்காக அவன் வித்தை காட்டிக் கொண்டிருந்தான். எனக்கு எப்படியும் 30 ஆயிரத்துக்கும் கீழாக விலையை முடித்துவிட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அப்பொழுதுதான் அவன் சொன்ன “இல்லாத கொறையெல்லாம் சொல்லு” என்பது ஞாபகத்துக்கு வந்தது.

“என்னங்க இது, உங்க வண்டில ஸ்டேரிங்கே இல்ல?” என்றேன்.
Add a comment...

அன்று வீட்டில் கடுமையான சண்டை.இதற்கு முன்பாக இத்தனை கோபம் வந்ததில்லை.

வீட்டை விட்டு வெளியேறிவிடலாம் என்று முடிவெடுத்து வீட்டை வெறித்தனமாகத் துழாவினேன்.

சின்ன வயதாக இருந்தபோது எங்கள் வீட்டில் ஒரு பெட்டி இருந்தது. அதைத்தான் தேடினேன். எங்கே வைத்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை.

பீரோ மட்டுமே நின்று கொண்டிருந்தது. நானறிந்த வரையிலும் வீட்டை விட்டு வெளியேறுகிற நபர்கள் பீரோவைத் தூக்கிக் கொண்டு போனதாகத் தெரியவில்லை.

பக்கத்து வீட்டில் ஏதேனும் பெட்டி வைத்திருந்தால் வாங்கித் தரும்படி அம்மாவிடம் கேட்டேன். சென்று பார்த்துவிட்டு வீடு பூட்டியிருப்பதாகச் சொன்னார்.

வேறு வழியே இல்லாமல் என் முடிவை மாற்றிக் கொண்டேன்.
Add a comment...

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். பெரும் பணக்காரர். நீண்ட நாட்களாகவே அவருக்கு ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று பெரும் ஆவல்.

சில மாதங்களுக்கு முன்பு என்னிடம் ஏதேனும் கதை இருந்தால் அதைப் படமாக்கலாம் என்று கூறினார். நானும் சம்மதித்து என்னிடம் இருந்த கதையின் ஒன்லைனைச் சொல்லியிருந்தேன்.

கதை ரொம்பவும் சிம்பிள். ”ஒரு கோழியும், ஒரு சேவலும் காதலிக்கின்றன. பின்னர் சில வாரங்களில் கோழி முட்டையிடுகிறது. மேலும் சில வாரங்களுக்குப் பிறகு கோழி முட்டையிலிருந்து கோழிக்குஞ்சு வருகிறது” இதுதான் கதை.

”கதை ரொம்ப ரொம்ப சிம்பிளா இருக்கே, நாம கொஞ்சம் பெரிய பட்ஜெட்ல பண்ணலாம். வேற ஐடியா ஏதும் இருக்கா?” என்றார்.

அருகிலிருந்த அவரது நண்பர், “ இல்ல இதவே நாம பெரிய பட்ஜெட்ல பண்ணலாம். கோழிக்குப் பதிலா யானைய வச்சுக்கலாம்” என்றார்.

இப்பொழுது கதை இப்படி மாறியிருந்தது. “ இரண்டு யானைகள் காதலிக்கின்றன. சில வாரங்களில் அந்த யானைகளில் பெண் யானை முட்டையிடுகிறது. மேலும் சில வாரங்களில் முட்டையிலிருந்து யானைக்குட்டி வருகிறது”.

எனக்கு குழப்பமாகிவிட்டது. இது லாஜிக் மிஸ்டேக் என்றேன்.

”பெரிய பட்ஜெட்ல பண்ணும்போது சின்னச் சின்ன லாஜிக் மிஸ்டேக் இருக்கத்தான் செய்யும். அதெல்லாம் கதையோட்டத்துல பெரிசா தெரியாது” என்று ஷூட்டிங் செய்ய ஆரம்பித்தோம்.

படம் பாதிக்கும் மேலாக வளர்ந்துவரும்போது ஃபைனான்ஸ் பிரச்சினை வந்தது. எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் கதையில் ஏதேனும் மாற்றங்கள் செய்யலாம் என்று முடிவு செய்தோம்.

இந்த முறையும் அந்த நண்பரே ஒரு தீர்வு சொன்னார். முட்டையிலிருந்து வரும் யானைக் குட்டிக்குப் பதிலாக ஆட்டுக் குட்டியை வைத்துவிட்டால் செலவுகள் கொஞ்சம் குறையும் என்றார்.

இறுதியாக கதை இப்படி மாறியிருந்தது. “ இரண்டு யானைகள் காதலித்து, முட்டையிட்டு, முட்டையிலிருந்து ஆட்டுக்குட்டி வருகிறது”.

அப்படியே படத்தை எடுத்து முடித்து வெளியிட்டோம்.

பெரும்பாலான ரசிகர்கள் ஆரவாரமாகக் கொண்டாடினார்கள். ஒரு சிலர் கேவலமாகக் காறித் துப்பினார்கள். “எந்த ஊர்லடா யானை முட்டை போட்டுச்சு? கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டாங்களா? என்ன எழவு லாஜிக் இது?” என்றெல்லாம் அடிக்க வந்தார்கள்.

சில இணைய விமர்சனங்களில், “ இது 1932 ல வந்த ஒரு கொரியன் படத்தோட அப்பட்டமான காப்பி” என்று எழுதியிருந்தார்கள். அதன் பின்னர்தான் நிம்மதியாக இருந்தது. நான் ஏதோ இல்லாத ஒன்றை எழுதிவிட்டேனோ என்ற கவலையிலிருந்து வெளியே வர அந்த விமர்சனம் உதவியது.
Add a comment...

என் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்.

ஏதேதோ பேசிக்கொண்டு, வாட்ஸப் குறித்தும் பேசினோம்.

" ஆமா, நேத்து எனக்கு வாட்சப்ல ஒரு மெசேஜ் அனுப்பிருந்தீங்கள்ல, அது உண்மையா? நம்பலாமா? " என்று கேட்டேன்.

" வாட்சப்ல வர்றத எல்லாம் நம்பாத. முழுக்க முழுக்க டுபாக்கூர். இப்பல்லாம் வாட்சப்ல ஒரு பர்சன்ட் கூட உண்மை கிடையாது" என்றார்.

நான் சரி என்று கூறிவிட்டு அமைதியானேன்.

நேற்று அவர் எனக்கு அனுப்பியிருந்த வாட்ஸப் மெசேஜ் " உங்க புது புக்கு படிச்சேன். ரொம்ப நல்லா இருந்துச்சு. செம்ம".
Add a comment...

ஃபேண்டஸி கதைகள் - முதல் விமர்சனம்.

குழந்தைகள் இலக்கியம் என்றொரு ஜானர் அவ்வளவு பிரசித்தி கிடையாது. எஸ்ரா'வின் முயற்சிகள்கூட அவ்வளவாக எடுபடவில்லை. அவர்களுக்கான தளத்திற்கு நாம் இறங்கி கதை சொல்வதில் உள்ள சவால் மிகப்பெரியது.

செல்வகுமார் பழனிச்சாமி இரண்டாவது முறையாக அதில் அசால்ட் காட்டியிருக்கிறார்.

மிகை கற்பனை கதைகளை சொல்ல முயற்சித்து நான் தோற்றுப்போன சமயங்களெல்லாம் செல்வாவின் ஒவ்வொரு கதையின் முடிவிலும் எனக்கு நினைவிற்கு வருகிறது. ஒரு ராஜா, ஒரு யானை, ஒரு பூதம், ஒரு சிங்கம் என குழந்தைகளுக்கான களங்கள் அடைந்துக்கிடப்பதை அமைதியாக அடித்து நொறுக்கி 32 கதைகளை எழுதியிருக்கிறார். குங்குமத்தில் வாராவாரம் ஒவ்வொரு கதையாக வந்தவற்றின் தொகுப்பு நூல். இத்தனை நாள் அவர் எழுதிக்கொண்டிருந்தார் என்பதே இப்போதுதான் தெரிந்தது. செ.கு.ப.சா. மன்னிக்க.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவரின் செயினை இழுக்கும் காந்தம், பேசுபவர்களின் குரலை திருடும் மொபைல் ஃபோன், நிழலை தின்று காணாமல் போக செய்யும் ஆடு, ஒட்டிக்கொண்டே உடன் வரும் மரத்தின் நிழல், கனவில் வந்தால் காணாமல் போகிறவர்கள், டிஜிட்டல் டிராவல் இயந்திரம்... என கற்பனை கடலில் அதகளம் பண்ணியிருக்கிறார்.

இவரின் முந்தைய படைப்பான 'எலி' நாவலில் இருந்த நகைச்சுவை உணர்வு இதில் குறைந்துப்போயிருக்கிறது. தவிர, பெரும்பாலான கதைகள் நீதிக்கதை பாணியில் முடிவது என்னைப் போன்ற வளர்ந்த குழந்தைகளுக்கு கொஞ்சம் ஆயாசத்தைக் கொடுக்கும். இவையெல்லாம் குழந்தைகளுக்கான புத்தகத்தைப் பொருத்தவரை குறையாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதால் தப்பித்துக்கொள்கிறார்.

செல்வராகவன் படமெடுக்கும் பாணியென்று ஒன்றை சொல்வார். அதாவது முதல் காட்சி முதல் க்ளைமாக்ஸ் வரை வரிசையாகவே எடுப்பது. அதனால் அவர் படங்களில் வரும் சோனியா அகர்வால், ரிச்சா போன்றவர்களை கவனித்தால் படம் போக போக துவக்க காட்சியில் இருந்ததைவிட அவர்களின் நடிப்பு மெருகேறிக்கொண்டே போகும். அது அப்படியே இந்த செல்வாவிற்கும் பொருந்துகிறது. முதல் நான்கைந்து கதைகள் கொஞ்சம் சோதாவாக போய்க்கொண்டிருக்கும் போது, பொறுமையாக நாம் அப்படியே உள்ளிழுக்கப்பட்டு ஒன்றரை மணி நேரத்தில் முழு புத்தகமும் முடிந்துவிடுகிறது.

பெருசா உங்க அப்பா ஃபேஸ்புக்லலாம் எழுதி கிழிக்கிறார்ல... உனக்கொரு கத சொல்ல சொல்லு டி... என்று ரிஷியிடம் அனுஷ்யா கோர்த்துவிடும் போதெல்லாம் ஒரு யானையும் ஒரு எலியும் ஒரு ஜேசிபி'யும் எனக்கு கைக்கொடுக்க ஏதேதோ சொதப்பி முடித்துவைப்பேன். ஆபாத்பாந்தவனாய் வந்திருக்கிறார் செல்வா. கோட்டான கோட்டி நன்றிகள் செ.கு.ப.சா. கோட்டான கோட்டி நன்றிகள்.

தற்செயலான நிகழ்வென்றாலும், செல்வா'வின் இரண்டு நூல்களுக்கும் முதல் மதிப்புரையை நான்தான் எழுதியிருக்கிறேன் என்பதில் பெருமகிழ்ச்சி. வாழ்த்துகள் செல்வா.

By,
மயிலன்.
Add a comment...
Wait while more posts are being loaded