Profile cover photo
Profile photo
நாடோடி இலக்கியன்
3,232 followers
3,232 followers
About
நாடோடி's posts

தமிழ் வருடப்பிறப்பிற்கு சைவம்தான் சமைப்பார்கள் என்று தெரிந்தும் ,"மீன் வாங்கிட்டு வரட்டுமா?" என்றேன். குறிப்பாக அன்று எழுந்ததும் பேசிய முதல் டயலாக்கே அதுதான்.

வழக்கமான 'மனுஷனா நீ' பார்வையை வீசிய அம்மணி,"இன்னிக்கு வருஷப்பிறப்பு" என்றார்.

"நம்ம ஊரு பக்கம் எல்லாம் வருஷப்பிறப்புக்கு அசைவம்தான் செய்வாங்க தெரியுமில்ல" என்றேன், என்னவோ ஊரின் பழக்க வழக்கங்களையெல்லாம் விடாமல் கடைபிடிக்கிறவன் மாதிரி.

இருப்பினும் நம்ம குறிக்கோளை அடைய நமக்கு சாதகமான அம்சங்களில் காய் நகர்த்தப் பழகுதல் ஒரு கலை.சில இடங்களில் அது அவசியம். எனக்கு இங்கே அது அத்தியாவசியம். உண்ண உணவு,உடுத்த உடை , உறங்க உறைவிடம் என்பதில் 'உண்ண மீன்' என்பது எனது அடிப்படை தேவைகளின் அகராதியில் வந்துவிடுவதால் ஏன் அத்தியாவசியம் என்கிறேன் என்பதை நீங்களும் புரிந்துக் கொண்டிருப்பீர்கள்.

"ம்ம்ம் அப்படியே இருந்தாலும் இன்னிக்கு வெள்ளிக்கிழமை" என்றார்.

இந்த மாதிரி வெள்ளி, சனி என்று நாள் நட்சத்திரம் பார்ப்பதெல்லாம் இப்போ மிகச் சமீபமாகத்தான் அம்மணி தொடங்கியிருக்கிறார். என் வீட்டம்மணியிடம் எனக்குப் பிடித்த விஷயங்களில் தலையாயது கேலண்டர் பார்த்து குடும்பம் நடத்தாதது. அப்படியிருப்பதால்தான் கிருஷ்ண ஜெயந்திக்கு மீன் வறுவல் சாப்பிடவெல்லாம் கொடுத்து வைத்தவனாக இருக்கிறேன். இதில் சின்ன சிக்கல் என்னவென்றால் பக்கத்து வீடுகளின் வழி இம்மாதிரி விசேஷங்களைத் தெரிந்து கொண்டுவிடுகிற போது, "ஏங்க, இப்படி பண்ணிட்டீங்க சொல்லியிருக்கலாம்ல, கிருஷ்ண ஜெயந்தியும் அதுவுமா இப்படி அசைவம் செய்யலாமா ... " என்று பொங்கல் வைப்பார் , அப்போதான அவரின் அறச்சீற்றமென்பது கோண்டுவானா காலத்திலிருந்து கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடி வருபவரைப் போல இருக்கும்.

பொங்கல், பங்குனி உத்திரம் என சொற்ப சிறப்பு நாட்களை மட்டும் நினைவு வைத்துக் கொண்டாடும் வகையில் , என்ர வீட்டம்மணி ஒரு மறத்தமிழச்சி. (தீபாவளி விதிவிலக்கு). அப்படியாப்பட்ட மறத்தமிழச்சி , வரலட்சுமி நோன்பு தொடங்கிய வந்தேறி விசேஷ நாட்கள் குறித்தெல்லாம் சமீபமாக எக்ஸ்போஷராகி வருகிறார். இது ஒரு ஆபத்தான போக்கு. பொதுவாக பண்டிகைகள் என்றால் அதன் கொண்டாட்ட மனநிலைக்காக எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிற மனதுடையவன்தான் நான். எனினும் இந்த வந்தேறி விழாக்கள் பெரும்பான்மை சுண்டல் விழாக்களாக இருப்பதே எனக்கானப் பிரச்சனை. அதுகொண்டே அம்மணியின் மறத்தமிழச்சி குண இயல்பை தக்க வைத்துவிட இத்தனை விசனப்படுகிறேன். மற்றபடி சைனீஸ் நியூ இயரைக் குறித்து எக்போஷராகி மறச் சீனச்சி ஆனால் கூட வரவேற்க சித்தமாய்த்தான் இருக்கிறேன்.

சரி நாம ஆட்டைக்கு வருவோம், அம்மணி சொன்ன அந்த 'அப்படியே இருந்தாலும்' என்பது நான் கொண்ட குறிக்கோளை அடைவதற்கான சாதகமான அம்சம் கொண்ட சொல்லாடல் என்பதால் 'இன்னிக்கு மீன் உறுதிடா பாரி, விடாத அப்படியே பிட்டைப் போடு' என்ற மைண்ட் வாய்ஸின் கட்டளைக் கேற்ப, பெண்களின் உளவியலோடு அளவலாவும் ஐடியாவில் , "ஊரே வருஷப்பிறப்புக்கு அசைவம் செய்தாலும், எங்க அம்மா சைவம்தான் செய்யும், நீயும் எங்க அம்மா மாதிரியே ஃபாலோ பண்ற" என்றேன்.

அடுத்தகணம் வருஷப்பொறப்பாவது, வெள்ளிக்கிழமையாவது என்று மின்னல் வேகத்தில் "மீன் வாங்கிட்டு வாங்க" என்ற பதிலை எதிர்பார்த்தவனுக்கு, 'பயபுள்ள நம்மள சீண்டிவிட்டு குளிர் காயப்பாக்குறான்' என்பதை மைண்ட் வாய்ஸில் எனக்கே பலமாக கேட்குமாறு ஓடவிட்டவர் , ஒரு முறை மேலும் கீழும் லுக்கிவிட்டு "மரியாதையா வாய மூடிக்கிட்டு போ அங்கிட்டு" என்பதாய் செய்கைக் காட்டினார்.

பிறகு சாம்பார் வாசம் வந்ததில் , வழக்கமாக என்ர அம்மணி என்னை வர்ணிக்கும் மூஞ்சிய முன்னூறு மொழத்திற்கு வைத்துக்கொண்டு, "ப்ச்" , "ப்ச்" என்று உச்சுக் கொட்டிக்கொண்டே திரிந்தேன். என்னின் செயலில் அம்மணி எரிச்சல் பட்டாலும், எந்நேரமும் "போய் மீன் வாங்கிட்டு வந்துத் தொலைங்க" என்று சொல்லுவதற்கான அறிகுறியும் தெரிந்தது. 'இன்னிக்கு இரவு பத்து மணியானாலும் உன்னோட நம்பிக்கையை மட்டும் கைவிட்டுடாதடா பாரி' என்று மைண்ட் வாய்ஸ் செம சப்போர்ட் செய்துகொண்டே இருந்தது.

அம்மணியிடமிருந்து அவ்வப்போது பாசிட்டிவ் சமிஞ்கைகள் தெரிந்தாலும் உறுதி படுத்திக்கொள்ள ஏலாமல் அவஸ்தையாய் திரிந்து கொண்டிருந்தவனை கோயிலுக்கு அழைத்துச் சென்றார். பைக்கில் காற்று குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி அவர்களை கோயிலுக்கு அனுப்பிவிட்டு , மெக்கானிக் ஷாப் தேடிக்கொண்டு சென்றவனுக்கு மீன் சந்தையொன்று கண்ணில் பட கையெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது.

அதே நடுக்கத்தோடு கோயிலுக்கு வந்தவன் எந்திரத்தனமாய் சாமி தரிசனம் முடித்து ஒரு கட்டையில் வந்து அமர்ந்தேன். மனுஷனோட அவசரம் புரியாம அன்னிக்குன்னு பார்த்து எங்க வீட்டு கோண்டுவானாக்காரியின் பக்தி ரொம்ப முத்தி, கோயிலின் ஒவ்வொரு சந்நிதானத்திலும் உருகி உருகி சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். எனக்கோ பல்ஸ் தாறு மாறா எகிற ஆரம்பித்துவிட்டது. ஒரு வழியாக பிறந்த வீட்டை பிரிந்து வருபவரைப் போல வந்தவரை காற்றில்லாத பைக்கில் ஏற்றி காற்றாய்ப் பறந்தேன் மீன் மார்க்கெட்டிற்கு.

எங்கே செல்கிறோம் என்றே தெரியாமல் வந்தவர் மீன் மார்க்கெட்டைப் பார்த்ததும், 'உன்னைய திருத்த முடியுமா?' என்பதாய் லுக்கிவிட்டு, அடுத்த கணமே "நல்லதா பார்த்து வாங்குங்க" என்று மீனில் கவனம் குவிக்கத் தொடங்கியதில் அன்று என் வயிற்றில் மீனை வார்த்தார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் , 'பூவோடு சேர்ந்த நாரும்' கணக்காக என்ர வீட்டம்மணியையும் ஒரு மீனடிமையாக்கி வைத்திருக்கிறேன். காலையிலிருந்து மீன் மீன் என்ற என் பாராயணத்தில் அம்மணியின் நாவின் சுவை மொட்டுக்களைத் தூண்டிவிட்ட என் விடா முயற்சியின் பலன்தான் அன்று எனக்கு மீன் கிடைக்க முக்கியக் காரணி என்றாலும் "அடடா, நம்ம வீட்டுக்காரர் ஆசைப்பட்டுக் கேட்டுட்டாரே அதனால சமைத்துக் கொடுப்போம்" என்கிற டோனில் இங்கே எழுதியிருப்பது, எங்க வீட்டில் 'நான்தான் புருஷன், வீட்டம்மணிதான் பொண்டாட்டி' என்கிறா மாதிரி ஒரு ஃபீல் கிடைக்குதுல்ல, அதற்காகத்தான்.

#இலக்கிய_இல்லறம்

நேற்று மதியம் சாப்பிட மூன்று மணிக்கு மேலாகிவிட்டது . "வரும்போது முட்டை வாங்கிட்டு வாங்க" என்றதை மறந்துவிட்டதால் அம்மணி அவசர அவசரமாக வாழைக்காய் வறுத்து சாப்பாடு போட்டார். அதாவது குண்டானோடு சோத்தையும், சட்டியோடு சாம்பாரையும் எடுத்து வைத்து சாப்பிடச் சொல்லிவிட்டு வாழைக்காய் வறுவலைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

அந்தச் சாம்பாரானது தெளிந்த நீர் நிலையை ஒத்து அடியாழம் வரை பளீச் என்று தெரிந்தது. வெண்டைக்காய் சாம்பார், முள்ளங்கி சாம்பார் மாதிரி இது கடமைச் சாம்பார். அதாவது 'சாம்பாராமாமாம்' வகைச் சாம்பார்.

நன்றாக வைக்கப்படும் சாம்பாரே நமக்கு ஆகாது, 'அதில் ரெண்டு கருவாடையாவது கிள்ளிப் போட்டிருக்கலாம்' என்று தோன்றும். இதில் இந்தச் சாம்பாராமாமாமை எப்படி உள்ளேத் தள்ள, போதாதற்கு காரமே போடாமல் நேந்திரம் பழ சிப்ஸ் கணக்காக வறுக்கப்பட்ட வாழைக்காய்த் தொட்டுக் கொள்ள.

இருப்பினும் , மறந்துவிட்டு வந்த முட்டையைக் குறித்து வெஞ்சினம் கொள்ளாது , அவசரகதியில் நமக்காக வறுக்கப்பட்ட காரமில்லா வாழைக்காய் வெஞ்சனத்திற்குப் பின்னால் உள்ள என் உடல் நலம் குறித்த அன்பை எண்ணி எந்தப் பிராதும் இன்றி உள்ளேத் தள்ளினேன். ஆரம்பத்தில் 'உள்ளே வெளியே'வாக நியூட்ரலிலேயே ஆட்டம் காட்டிய சாப்பாடு ,கொஞ்சம் கொஞ்சமாக வாழைக்காயின் சுவை பிடிபட்டதில் 'அதுவே பழகிடும்' கணக்காக டாப் கியருக்குத் தாவி பசியை அடக்கியது.

சோத்துப் பானையில் கடைசியாக இருந்தக் கைப்பிடியளவு சோறையும் வீணாகப் போய்விடுமே என்றெண்ணி ஸ்வாகா செய்துவிட்டே எழுந்தேன்.

வெற்றுக் குண்டானைப் பார்த்த அம்மணி பெருமைப் பார்வை ஒன்றை உதிர்த்தார். ஆஹா தன் கைப்பக்குவம் குறித்து பெருமிதம் கொள்கிறாள் போல, "எங்க வீட்டுக்காரருக்கு தண்ணியா சாம்பார் வச்சா உசுரு" என்று இதையே சாக்காகக் கொண்டு கிளம்பிவிட்டால் என்று குலை நடுங்கியவன் இந்த வர்தாவிற்கு ஒரு பர்தா போடணுமே என்று யோசித்து , "ஆத்தா, நீ வச்ச சாம்பாரில் மதி மயங்கி ...ச்சீ வயிர் மயங்கி கவளங்கவளமா நாங்க சோத்த உள்ளேத் தள்ளவில்லை , சோத்துக் குண்டான் இப்படி விம் பார் மாடல் போலப் பளீச் என்று காட்சியளித்தால் சோறு பத்தலன்னுக் கூட எடுத்துக்கலாம்" என்று மைண்ட் வாய்ஸில் லென்த்தியா பேசிவிட்டு, வெளியில் "புதிய பாதை படம்தான் நினைவுக்கு வருது " என்றேன் சுருக்கமாக.

"ம்ம் ,அதுல சோறு பத்தாதுன்னு தெரிஞ்சு , சீதா சாப்பிடட்டும்னு நெனச்சு பார்த்திபன் சாப்பிடாமல்ல எந்திரிச்சுப் போவாரு, இங்கே அந்த நெனப்பெல்லாம் ம்ஹும், தான் வயிறு நெறஞ்சிட்டாப் போதும்" என்றார்.

பௌன்சரை எறிந்துவிட்டோம் என்றிருந்தவனுக்கு ' வீட்ல பெரியவங்க இருந்தா வரச் சொல்லு' வகையிலான இந்த எதிர்பாரா ரிப்ளையில் லைட்டா அள்ளு விட்டாலும் அகத்தை முகத்தில் காட்டிவிடாமல் , " ஏந்தங்கம், அதில் சாப்பாடு பத்தாதுன்னு தெரிஞ்சி புள்ளத்தாச்சியா இருக்கும் சீதா,தான் பட்டினி கெடந்தாலும் பரவாயில்லை , புருஷன் சாப்பிடட்டும் என்று இருக்க மொத்த சோத்தையும் புருஷனுக்குப் போடுவார், இப்படி தின்னுட்டு இருக்கும் மிச்ச மீதியை அல்ல" என்றேன்.

"அட , கரக்ட்டா பாய்ண்டைப் புடிச்சிட்டான்" என்பதாய் லுக்கியவர், "ம்ம்ம்" என்று ஸ்லோ மோஷனில் இழுத்தபடி முறைத்துவிட்டுப் போனார்.

ந்த் ஸ்லோ மோஷன் ரியாக்‌ஷனை மொழி பெயர்த்தால் ," மதியச் சாப்பாட்டுக்கு வரதுன்னா ஒரு மணிக்குல்ல வரணும் , நீ மூணு மணிக்கும் முப்பது மணிக்கும் வருவ, அது வரைக்கும் நாங்க வயித்துல ஈரத்துணியப் போட்டுக்கிட்டு 'ஸ்வாமி நாதா' என்று புராண காலம் மாதிரி வழி மேல் விழி வச்சிட்டு இருப்போமாக்கும், இருக்கத தின்னா தின்னு, திங்காட்டி போ" என்று வந்தது.

"ஏன் நான் திங்காம போறேன், என்னைய என்ன மானம் ரோஷம் உள்ளவன்னு நினைச்சியா?" என்று அந்த மொழி பெயர்ப்பிற்கு பதிலாக நல்லா நாக்கைப் புடிங்கிக்கிறா மாதிரி மைண்ட் வாய்ஸில் ஓங்கிக் கேட்டுவிட்டுத்தான் மறு வேலையே பார்த்தேன்.

ங்கொய்யால யாருகிட்ட!

#இலக்கிய_இல்லறம்

போன வாரம் : மீன் குழம்பு புளிப்பா செமயா இருக்குல்லங்க.

இந்த வாரம் : மீன் குழம்பு செம புளிப்ப்ப்பா இருக்கு, எப்படிதான் சாப்பிடுறதோ.

குறிப்பு: போன வாரம் :மாங்காய் அவங்க வீட்டில் இருந்து வந்தது.

இந்த வாரம்:புளி எங்க வீட்டிலிருந்து வந்தது.

#உலக_நடப்பு

ஃபேஸ்புக்கில் எழுதிய இந்த இடுகைக்கு நம்ம க்ரூப்ல உள்ள ஒரு புருஷனும் பொண்டாட்டியும் தங்கள் வருகையை பதிவு செஞ்சிருந்தாங்க.... எப்படீன்னா பொண்ணு லைக் பொத்தானையும், அந்த பையன் சிரிப்பானை அழுத்தியிருக்காங்க.
அதிலிருந்தே இந்த ஹேஷ் டேக் சரியானதுதான்னு கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டேன்.

அடிச்சிக் கேட்டாலும் அவிங்க யாருன்னு காட்டிக் கொடுக்க மாட்டேன். உங்களாலயும் கண்டே புடிக்க ஏலாது. 

வீடு மாற முடிவு செய்ததிலிருந்தே வீட்டம்மணி பொருட்களை பேக் செய்யத் தொடங்கிவிட்டார். ஆரம்பத்தில், கிடைக்கிற இடைவெளிகளில் இந்த பேக்கிங் வேலைகளைச் செய்தவர்; கடைசி இரு வாரங்களில் பேக்கிங் செய்தலுக்கே இப்பிறவி என்பது போல நம்மள நம்பி மூணு ஜீவன் இருக்கே அதுகளுக்கு சோறு பொங்கிப் போடணுமே என்றெல்லாம் யோசிக்காது, பேக் செய்வதையே ஒரு வேள்வியெனக் கொண்டுக் களமாடினார். இந்தக் களமாடலில் நல்ல நிலையில் இருந்த பல பொருட்கள் குப்பைக்குப் போயின.

காய்கறிக் கொட்டி வைக்கவென வாங்கிய பிளாஸ்டிக் அடுக்கொன்று கட்டுக் குலையாமல் இருந்தது, வாங்கியதிலிருந்தே அதன் நிறம் பிடிக்கவில்லையாம் ,எப்போடா தூக்கிக் கடாசுவோம் என்று இருந்ததாம். இப்படித்தான் எல்லாவற்றிற்கும் "இந்த டீயில் நிறமில்லை" கணக்காக ஏதேனும் ரகளையான காரணங்களைச் சொன்னார்.

குளியலறையில் இருந்த பெரிய சைஸ் டப் இரண்டினை புது வீட்டிற்கு செட் ஆகாது என்று காயலான் கடையில் இருபது ரூபாய்க்கு போட்டுவிட்டு , தான் ஒன்றும் பொருட்களை சும்மா தெருவில் போட்டு விடவில்லை ,"சொளையா இருபது ரூபாய் தெரியுமில்ல" ரேஞ்சிற்கு பெருமை பீத்தக் கலயச்சியாய் பீறு நடைப் போட்டு வந்தார் .

அந்த சமயத்தில் டைபாய்டில் அடிப்பட்டுக் கந்தலாய்க் கிடந்த நான் 'அய்யகோ நல்ல நிலைமையில் இருக்க பொருட்களுக்கே இந்த கதியென்றால்' என்று எண்ணியதன் விளைவாக அனிச்சையாய் ,"ஆத்தா உன் வேள்வி உக்கிரத்தில் இதெல்லாம் எதுக்கு இன்னமும் கெடக்கு என்று என்னையும் தூக்கி வெளில போட்டுடப் போற" என்றேன் .

"இப்போ வரைக்கும் அப்படியொரு ஐடியா இல்லாமல்தான் இருந்தேன் , ஆனா இப்போ தோணுது " என்றார் தாளித்தலுக்கு கறிவேப்பிலையை உருவிப் போடும் இயல்பிலான உடற் மொழிக் கொண்டு அத்துனை இலகுவாக. கூடவே "இவ்வளவு உடம்பு சரியில்லாத போதும் அந்த வாயி அடங்குதா பாத்தியா ?" என்றார் .

இப்போது அந்த டப்பின் கொள்ளுப் பேத்தி சைசில் இருக்கும் டப் ஒன்றின் விலை 390 என்கிறான் . பகீர் என்று இருந்தது; பின்னே முட்டையிடும் கோழிக்கன்றோ தெரியும்! .

அந்த விலையை நினைத்து மறுக்கா இன்னிக்கு காலையில் அம்மணியிடம் புதுசாவும் ஆரம்பித்தேன் . "அய்யய்ய இந்த ஓயாமாரித் தொல்லை தாங்க முடியல" என்கிற அவரின் வழக்கமான ரியாக்ஷனைக் கொடுத்தவர் , " ஏங்க , நீங்களே யோசிங்க ,அந்தத் துரு புடிச்சது; உப்புப் பூத்ததெல்லாம் கொண்டு வந்து இந்த வீட்டில் வச்சா வெளங்குமா?" என்றார் .

யோசிச்சுப் பார்த்தேன்,வீட்டினை நேர்த்தியாய் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட எனக்கும் அவர் சொல்வதும் சரிதான் என்று பட்டது.

சற்றே ஆழமாய் யோசிக்கும் முகபாவனையோடு "ஆமாடி, நீ சொல்லறதும் சரிதான் " என்றவன், சற்று டீப்பாக அம்மணியை ஒரு லுக் விட்டு ,"பழசு எல்லாத்தையுமே கடாசிவிட்டு இந்த வீட்ல எல்லாத்தையுமே புதுசா வச்சிக்கலாம்னு தோணுது " என்றேன் .

அக்கணமே மின்னலென அம்மணியிடமிருந்து நான் எதிர்பார்த்த அதே ரிப்ளை அட்சரம் பிசகாமல் எகிறி வந்தது . "பொண்ணுன்னா அப்படி இருக்கணும்; இப்படி இருக்கணும்" என்று போதிக்கும் ரஜினிப் படங்களை பார்த்து வளர்ந்த யாருக்கும் அந்தப் பதிலைக் கேட்டு கொலை வெறி வந்திருக்கும்.

ஆனால் பாருங்க "சூப்பர்டா பாரி,உன் பொண்டாட்டியைப் பற்றி எத்துணைத் துல்லியமாத் தெரிஞ்சி வச்சிருக்க; உன் அவதானிப்பே அவதானிப்பு,பின்றடா; ஜோடிப் பொருத்தம் மாதிரி நிகழ்ச்சியெல்லாம் இப்போ இருந்தா மொத பரிசு உங்களுக்குத்தான்டா" என்று எனக்கு நானே சபாஷ் போட்டபடி காயலான் கடையினின்று என்ர அம்மணி வாகை சூடி வந்த அதே பெருமைப் பீத்தக் கலய நடையை எனதுமாக்கி ஹாலுக்கு வந்தேன் .

#இலக்கிய_இல்லறம்புது வீட்டின் அழகில் மயங்கிய வீட்டம்மணி, "நமக்குன்னு இந்த மாதிரி ஒரு சொந்த வீடு சென்னையில் வாங்கிடணும்" என்றார்.

"எப்போவோ வாங்கியிருக்கலாம் , இப்பவும் ஒண்ணும் பிரச்சனையில்லை, நீ தக்காளி வாங்குவதை மட்டும் கொஞ்சம் கம்மி பண்ணிக்கிட்டாப் போதும்" என்றேன்.

லைட்டா முறைத்தார், அப்படி முறைத்தால் அம்மணி நல்ல மூடில் இருக்கிறார், இன்னமும் கூட இறங்கி கலாய்க்கலாம் என்று அர்த்தம் என்பதால் , "கடந்த ஆறரை வருட என் சம்பாத்தியத்தின் பெரும் பகுதியை 'ஏங்க தக்காளி வாங்கிட்டு வாங்க' என்கிற வசனம்தான் ஆட்டைய போட்டுடுச்சு" என்றேன். அம்மணி லைட்டா சிரிச்சா மாதிரி தெரிந்தது, அட இன்னும் கொஞ்சம் டீப்பா இறங்கலாம் போலிருக்கே என்று எண்ணியவன், ஃபைனல் டச்சாக,"முருங்கைக்காய் சாம்பார், முருங்கைக் கீரைப் பொறியல், முருங்கைப் பூ ரசம்" என்று முருங்கையை வைத்து ரகளை செய்யும் முந்தானை முடிச்சு ஊர்வசி மாதிரி, தக்காளி கிலோ எண்பது ரூபாய் விற்கும் போது அப்போன்னு பார்த்து ஸ்பெஷலாக தக்காளித் தொக்குத் தொடங்கி தக்காளிச் சட்னி வரை தக்காளியை வைத்து இன்னும் கூட சில பல சமையல் ஆராய்ச்சிகளை மேற்கொள்றியே எப்படி தங்கம்" என்றேன்.

ஆரம்பித்தார், அரை மணி நேரம் கேப்பே விடலையே ..... நான் கூட புது வீட்டிற்கு வந்ததும் என் பொண்டாட்டியும் புதுசா தெரியிறாளேன்னு நெனச்சிட்டேன். 'ஒன்னைய யாரு அப்படியெல்லாம் நினைக்கச் சொன்னது, நான் என்னைக்கும் பழைய பன்னீர் செல்விதான்டா ங்கொய்யால' என்றாகி பொங்கியதில் , என்ர அதே பழைய வீட்டம்மணியாய் அவரை மீட்டு வந்தத் திருப்தியில் வழக்கமான புத்தரின் புன்னகை முகம் தாங்கி அதே வழக்கமான தேன் மாரி பொழிவதாய் அமர்ந்திருந்தேன்.

#இலக்கிய_இல்லறம்

Post has attachment
Photo

Post has attachment
பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன்
தமிழ்த்திரையுலகம்   சார்ந்த   கட்டுரைகள்   எழுதுவதில்   பாடலாசிரியர்கள்   குறித்து   எழுதுவது   சற்றே   சிரமமான   காரியமாய்   இருக்கிறது .  காரணம்   பாடலாசிரியர்கள்   குறித்த   தகவல்   திரட்டு   அத்தனை   எளிதானதாய்   இருப்பதில்லை .  காட்சி   ஊடகங்கள் , பண்ப...

இனியா தனது பள்ளியில் நடந்த ஓட்டப் பந்தயத்தில் இந்த வருடமும் முதலிடம் பிடித்தாள்.

#ஈன்ற_பொழுதினும்

எதையோத் தேடிக்கொண்டிருக்கும் போது வீட்டம்மணியின் கல்லூரி குழு புகைப்படம் கண்ணில் பட்டது. அதை எடுத்து பக்கத்தில் வைத்துவிட்டு என்னுடைய தேடலைத் தொடர்ந்து கொண்டிருந்த போது அம்மணி உள்ளே வந்தார்.

தன்னுடைய கல்லூரி நண்பிகள் சூழ் புகைப்படம் கண்ணில் படவும் ஆர்வமாய் கையில் எடுத்து, படையப்பா சிவாஜி தூணைத் தடவி பார்ப்பது போல தடவிப் பார்த்துவிட்டு, "ஏங்க இந்த ஃபோட்டோல இருக்கவளுகல்ல உங்களுக்கு யாரையெல்லாம் புடிச்சிருக்கு?" என்றார்.

தேடினதை விட்டுவிட்டு அடிச்சேன் ஒரு யூடேர்ன். அடுத்த நொடி புகைப்படத்தைக் கையில் வாங்கியவன், வாங்கிய வேகத்தில் பளிச் என்று கண்ணில் பட்ட லைலா சாயல் பெண்ணைக் காட்டி, "இதுதான் டாப்பு" என்றேன்.

அம்மணி வாயை மூடிக்கொண்டு அடக்க மாட்டாமல் சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தார்."இவ ஏன் இப்படி சிரிக்கிறா?" என்று குழம்பியபடியே புகைப்படத்தை மறுக்கா நன்றாக உற்றுப் பார்த்தேன். அட அது என்ர வீட்டம்மணி. "ஏங்க கொட புடிச்சிட்டு போற பெரியவரே" என்று கவுண்டர் செந்திலைக் கூப்பிட்டு கும்பிட்டுவிட்டு பின்னர் செந்தில் என்று தெரிந்ததும் " இவன போயி கும்பிட்டோமே, இந்தக் கையை அடுப்புல வச்சி கருக்கிக்கணும்" என்பாரே அதனை ஒத்து ஒரு மைண்ட் வாய்ஸ் ஓடிக்கொண்டிருந்தது.

"வேணும்னுதானே சொன்னீங்க" என்றார். அட, அப்போவாவது பொய்மையும் வாய்மையாக்கி "ஆமா" என்று சொல்லி அம்மணியை தரையிலேயே இருக்க வச்சிருக்கலாம். அதையும் கோட்டைவிட்டுவிட்டு அநியாய உண்மை விளம்பியாய்," ச்சே, நெஜமாவேதான் சொன்னேன், நீன்னு தெரிஞ்சா சொல்லுவனா நானு " என்றேன்.

அதன் பிறகு இரண்டாம் இடம், மூன்றாம் இடம் என அழகிகளைத் தேர்ந்தெடுத்து வர்ணித்துக் கொண்டிருந்தேன். அம்மணிக்கு எப்போதும் வருகிற கோபம் மிஸ்ஸிங். மாறாக என்னுடைய கமெண்டிற்கு ஜால்ரா தட்டிக் கொண்டிருந்தார்.

நீதி:அதாகப்பட்டது பொண்டாட்டியை பக்கத்தில் வச்சிக்கிட்டே சைட் அடிக்கணும்னா முதலில் பொண்டாட்டிக்கு ஒரு மிஸ் வேல்ட் பட்டத்தைச் சூட்டிவிட்டுடணும். அவுக அந்தக் கிரீடம் சுமந்து கற்பனை மேடையில் பூனை நடை நடக்கும் நேரம் நாம நமக்கான ரூட்டில் எந்தத் தடையுமின்றி பயணிச்சிக்கலாம்.

#இலக்கிய_இல்லறம்

என்ர மம்மி ஒரு கிச்சன் கில்லாடி. இந்த வயதிலும் சமையலில் தன்னை அப்டேட் செய்து கொண்டே இருப்பவர். சைவம் , அசைவம் , ஸ்வீட்ஸ் , ஸ்நாக்ஸ் என எல்லா ஏரியாவிலும் பிரமாதமாய் ஸ்கோர் செய்வார்.

குறிப்பாக சைவ சமையலில் தக்காளிக் குழம்பு,பொரித்த குழம்பு, தக்காளி சூப், சுண்டைக்காய் கறி, சேப்பங் கிழங்கு பிரட்டல் இப்படி அவரின் கைப்பக்குவத்தில் நிறைய வெரைட்டிகள் அசைவப் பிரியனான எனக்கு அவ்வளவு பிடிக்கும். இப்படியாப்பட்ட மெனு ராணியான என்ர அம்மா சமையலில் சறுக்குகிற ஐட்டங்கள் மீன் குழம்பும் , ரசமும்.

என்ர மம்மியின் கைப்பக்குவத்தில் மீன் குழம்பை சாப்பிட நேர்கிற நேரம், தான் பெத்த புள்ளையையே 'யார் பெத்த புள்ளையோ' என்று என்ர மம்மியே பார்க்க நேரும் வகையிலேயே அத்துணைத் தீவிரமாய் இருக்கும் அதன் ருசி.எழுபது விழுக்காடு இப்படித்தான் இருக்கும். தப்பித் தவறி சில நேரங்களில்தான் நன்றாக இருக்கும்.

அடுத்ததா ரசம், என்னடா ரசமெல்லாம் ஒரு மேட்டரா என்று தோணுதா, ரசம்னா பார்க்கத்தான் தண்ணியா இருக்கணும், சாப்பிடவும் அப்படியே இருந்தால்?.

இவை இரண்டிலும் பாஸ் மார்க் வாங்கிவிட என்னன்னவோ சாகசம் செய்து பார்க்கிறார். ரிசல்ட் என்னவோ என்றும் இளமையாய் சிரஞ்சீவித் தன்மையோடு ஒரு இஞ்ச்கூட மாற்றமில்லாமல் அவருக்கு டகால்ட்டிக் காட்டிக்கொண்டிருக்கிறது.

ஆச்சர்யமாக என்ர வீட்டம்மணி மீன் குழம்பும் ரசமும் ரொம்பப் பிரமாதமாய் செய்வார். "மீன் குழம்பில் இவளை அடிச்சிக்க முடியாது" என்று என்ர அம்மாவிடம் அடிக்கடி பெருமை பேசுவேன். மாமியாரிடம் தன்னைப் பற்றி தன் புருஷன் பெருமை பேசுவதெல்லாம் எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது.அந்த டைமில் மட்டும் அப்படி ஒரு பாசம் புதிதாய்ப் பிறக்கும் என் மீது என்ர வீட்டம்மணிக்கு.

போன வாரம் என்ர வீட்டம்மணி மீன் குழம்பு வைத்திருந்தார். சும்மா சொல்லக்கூடாது அப்படியே எங்க அம்மாவின் கைப்பக்குவம்.நானும் என்னன்னவோ செய்து உள்ளே தள்ளப் பார்க்கிறேன். ம்ஹும் முடியவில்லை. "படு கேவலமாக இருக்கு" என்று அம்மணியிடம் சொல்லி, அதில் அம்மணி படுகிற எரிச்சலைப் பார்த்தாவது திருப்தியாகி இதை உள்ளே தள்ளிவிடலாம் என்றால், "வாயில வைக்க வெளங்கல" என்று அம்மாவிடம் தேங்காய் உடைத்தாற் போல பட்டென்று சொல்வதைப் போல இங்கே முடியுமா?

"நீ என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது, ஒரு நொடி என் இடத்தில் இருந்து பார், இந்தக் கொடுமைக்கு பழிக்குப் பழி வாங்கினாத்தான் அடுத்த கவளத்தை உள்ளே அனுப்புவேன்" என்று ஸ்ட்ரைக் செய்த தொண்டைக்கு நியாயம் கேட்கவென என்ன ஆனாலும் சரியென்றுத் துணிந்தேன்.

அடேய் பக்கத்துலயே சோத்துப் பானை, குழம்புச் சட்டி எல்லாம் இருக்கு சேதாரம் ஜாஸ்தியாகி விடும் பார்த்துக்க என்று ஊடால ஒரு யோசனை சட்டென்று ஓடியதால் கடைசி நொடியில் நிதானித்து உஷாராகி யோசித்தவன் , இப்படி ஆரம்பித்தேன்.

"உங்க அம்மா மாதிரியெல்லாம் எனக்கு சமைக்கத் தெரியாதுன்னு சொல்லுவே இல்ல, ஆனா உன்னாலயும் முடியும்னு இன்னிக்கு நிரூபிச்சிட்டடி, அப்படியே அச்சு அசலாய் அதே கைப்பக்குவம்" என்றேன்.

அம்மணிக்கும் தொண்டை ஒத்துழையாமை இயக்கத்தில் இருந்திருக்க வேண்டும் , 'ம்ம்ம்' என்று எதிர்ப்பு இல்லாத வகையிலான ஒரு சிரிப்பைத் தந்தார். இதுதான் சாக்கென்று தொடர்ந்து,"இந்தக் குழம்பு எப்படி வச்சேன்னு ரெசிப்பி சொல்லு, அம்மாட்ட சொல்லி இந்த மிஸ்டேக்கைத்தான் நீ ஆண்டாண்டு காலமாய் செஞ்சிட்டு வர, கரக்ட் பண்ணிக்கோன்னு சொல்லணும்" என்றேன்.

வாழைப்பழ ஊசியாய் தன் கைப்பக்குவம் அசிங்கப்படுத்தப்படுவது குறித்துக் கிஞ்சித்தும் அம்மணியிடம் சீற்றம் இல்லை. மாறாக மாமியாரின் கைப்பக்குவம் டரியல் செய்யப்பட்டதில் பூரித்துப் போய் நோக்கினார்.

மீன் குழம்பின் சொதப்பலுக்குக் காரணமாய் என் அம்மா எப்போதும் சொல்வது, மீன் ஃபிரஷ்ஷா இல்லை என்பது. எங்கள் கிராமத்தில் கடல் மீனுக்கு வேறு ஆப்ஷன் இல்லாத சூழலில் இலுப்பைப் பூ சர்க்கரையாக தெருவில் வரும் மீன்காரரிடம் என்ன கண்டிஷனில் மீன் இருந்தாலும் அதை வாங்க வேண்டிய சூழல்தான் பெரும்பாலும்.

ஒரு வேளை அம்மா சொல்வது சரியாதான் இருக்குமோன்னு ஒரு டவுட் வந்தது. ஏனெனில் அன்றைக்கு நான் வாங்கி வந்த மீனும் அத்தனை ஃபிரஷ் கிடையாது,வேற மீன்களே கிடைக்காத சூழலில்தான் அதை வாங்கி வந்தேன். இதைக் குறித்து அம்மணியிடம் சொல்லி,"ஒரு வேளை, அம்மா சொல்றது சரியாத்தான் இருக்குமோ?" என்றேன்.

அதெல்லாம் காரணமே இல்லை என்பதாய் "குழம்பு சட்டியில் கூட உசுரோட துள்ளுச்சு தெரியுமா?" ரேஞ்சில் மார்க்கெட்டிலேயே அரிந்து வாங்கி வந்த அந்த மீனுக்கு அப்படி ஒரு வக்காலத்து வாங்கி, தான் தான் இன்று குழம்பை சொதப்பி விட்டதாக அவசர அவசரமாக பழியை தன் மீது போட்டுக் கொள்கிறார் , 'தன்னிடம் இருக்கும் பொம்மையை யாருக்கும் தர மாட்டேன்' என்று பொம்மையை அணைத்துக் கொள்ளும் குழந்தையின் செயலை ஒத்து.

நானும் இதுதான் வாய்ப்பென்று நன்றாக கழுவி கழுவி ஊற்றினேன். கடுகளவுக்கேனும் அம்மணியிடம் கோபம் வரணுமே, ம்ஹும்.

இனி இந்த ரூட் பயனளிக்கிற வரைக்கும் இதுதான் நமக்கான ராஜபாட்டை என்று முடிவு பண்ணியிருக்கேன்.

#இலக்கிய_இல்லறம்
Wait while more posts are being loaded