Profile cover photo
Profile photo
SuPa. Muthukumar
1,187 followers -
நினைவில் ஊருள்ள மிருகம்
நினைவில் ஊருள்ள மிருகம்

1,187 followers
About
SuPa.'s posts

சொல்லாத வார்த்தைகளின்
முடைநாற்றத்தால்
நிறைந்திருக்கிறேன் நான்.

நிறுத்தத்தைத்
தவறவிட்ட பயணியைப்போல்
என்னுடனே பயணிக்கின்றன
பல வார்த்தைகள்.

இரத்தம் பொங்கும் சில வார்த்தைகள்,
கடைசிச் செங்கல்லாய் சில,
தீட்டிய கூர்மையுடன் சில,
வீட்டுச் சுவற்றைத் தாண்டவிடாத
முரட்டுச் செல்லப் பிராணியைப்போல் சிலவென,
அவை
எனக்குள் ஊர்ந்துகொண்டேயிருக்கின்றன.

கனவாய் ஆவியானவை,
கனவை ஈரமாக்கியவை போல
தனிமைப்பொழுதுகளில்
கண்கள் வழியே சில வெளியேறி
என் சுமையைச் சற்றே குறைக்கின்றன.

ஆயினும்
இன்னும் வெளியேறாத வார்த்தைகள்
என் குரல்வளைக் காற்றை
விழுங்கியபடியிருப்பதை
கையறு மௌனத்தோடு பார்த்திருக்கிறேன்.

இந்தக் கவிதையிலும் கூட
சொல்லாத பல……..-சுப. முத்துக்குமார்.

கண்ணீரும் இல்லை மென்னகையும் இல்லை
சேரவும் இல்லை விலகவும் இல்லை
உன்னுள்ளும் இல்லை வெளியிலும் இல்லை
நீயாகவும் இல்லை நானாகவும் இல்லை
நான்நீநீநான்நீ.

என் மீதான புகார்கள்
நிறைய இருக்கின்றன
என்னிடம்.

கலங்கிய பிம்பங்களிலிருந்து
பாயும் கூராயுதங்கள்
என் தசைகளுக்குள்
மெல்லப் புதைந்தபடியிருக்கின்றன.
எல்லாக் கோணங்களிலிருந்தும்
ஏதோ ஒரு அம்பு
என்னைத் துளைத்துக் கொண்டேயிருக்கிறது.

மெல்லப் பரவிப் பற்றும்
நேசத்தின் காற்றுக்காய்
பிளந்த செவுள்களுடன்
வானம் பார்த்துக் கிடக்கின்றன
இரத்தம் தோய்ந்த என் விரல்கள்.

இசையின் சுவர்களிலோ
மதுக்கோப்பையின் வேர்முண்டுகளிலோ
என் கண்ணீர்க் கொடிகளைப்
படரவிடுகிறேன்.

மன்னிப்பின் எல்லைகளுக்கப்பால்
நிற்கின்றன
என் புலம்பல்கள்.

தொண்டைக்குழியில்
நின்று கொண்டிருக்கும்
பைங்கசப்பினை
எத்தனை உதட்டு முத்தங்களும்
கழுவிடவில்லை.

எனக்கான ஒரு குரல்
தூரத்தில் வருவதான
மாயையைப் பற்றிக்கொண்டு
மெல்ல இளைப்பாறுகிறது
என் மூச்சுக் குழல்.

சிறு பரிகசிப்போடு
கடந்து செல்லும்
உருவங்கள் பலவற்றில்
என் சாயல் பார்த்த
குரூர நிம்மதியுடன்
திறந்த நிலத்தில்
ஒரு கல்லெனக் கிடக்கிறேன்.

மழையோ வெயிலோ
இடையறாது ஊற்றட்டும்
சாம்பலோ தளிரோ
எதுவாகவோ சிதையட்டும்
நான்.

-சுப. முத்துக்குமார்


மூன்று இருக்கைகள் முன்னே
அமர்ந்து உறங்கிக் கொண்டிருப்பவள்
உன்னைப்போலவே சேலையணிந்திருக்கிறாள்,
அவளுக்கும் உனதைப்போலவே கூந்தல்.
சற்றே தெரியும்
கன்னக்கதுப்பிலும்
வேகத்தடை ஏறிஇறங்கையில்
ஆடும் காதணியிலும்
மெல்ல மெல்ல
நீயாகவே மாறிக்கொண்டிருக்கிறாள்.
எனக்கும் அவளுக்குமிடையே
ஊர்ந்துகொண்டிருக்கும்
புலப்படாத நதியொன்றில்
படகுகளாய்த் திரிகின்றன
நீ நிரம்பிய என் நாட்குறிப்பின்
காகிதங்கள்.
நமக்குப் பிடித்த பாடல்
ஒலிக்கத் தொடங்கும் கணத்தில்
முற்றிலும் நீயாய் மாறிவிட்ட அவள்
என்புறம் திரும்பிப் பார்க்கும் முன்
இந்தப்பயணம் முடிந்துவிட வேண்டும்
அல்லது….

-சுப. முத்துக்குமார்

நீ விட்டுச் சென்ற புள்ளியில் தான் நின்று கொண்டிருக்கிறேன், நெடுஞ்சாலையில் இறக்கி விடப்பட்ட பைத்தியக்காரன் போல். 

வெகுகாலம் கடந்து எழுதப்படும் நாட்குறிப்பு இது. அப்படியே அந் நாளின் சாரத்தோடு. மங்கலாக, கலங்கலாக அப்படி இப்படியெல்லாம் இல்லை; அப்படியே இருக்கிறது அந்த நினைவு. அதெல்லாம் அப்படியேதானிருக்கும்!? இல்லையா?!! மூன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த இவன் இப்போது இதை எழுதிக்கொண்டிருக்கையிலும் அந்தத் தூறலுக்குள் கொஞ்சம் நனைந்து வருகிறான்.

வரிசையாக, அளவாகக் கட்டப்பட்ட வீடுகள் கொண்ட அரசாங்கக் குடியிருப்பு. வரிசையின் இக்கடைசியில் அவளும் அக்கடைசியில் இவனும். அப்படியொன்றும் பெரிதாய் ஈர்ப்பு இருந்ததில்லை அவளோடு. ஆட்டம் ஓட்டமென எதுவும் இருந்ததில்லை. சொல்லப்போனால் அவளோடு அந்த மழை நாள் மட்டுமே இவனுக்கான ஒட்டுதல். மழையென்றால் அதுதானே! ஒட்டவைப்பதும் விலக்கி ஓடுவதும் மழைதான். எப்போதாவது தூறும் மழை அற்புத நிகழ்வு. வாழ்வின் பெருநிகழ்வுகள் மழையை ஒட்டியே அமைவது என்ன குறியீடு? மழைக்கும் வாழ்க்கைக்கும் மட்டுமே புரியும் சொல்லாடலாகத்தான் இருக்கும் அது.
அவள் வீட்டுக்கு வெளியே மழையில் ஒதுங்கி மழை பார்த்துக் கொண்டிருந்தோம். மழையில் நனைந்தபடியே ஒதுங்கியிருப்பதுதானே பால்யத்தின் சிறப்பு! அரக்குப் பச்சை நிறத்தில் முழுப்பாவாடையும் அவள் அப்பாவின் அரைக்கைச் சட்டையோடும் அவளே ஒரு கிளையருவி போலத்தான் நின்றிருந்தாள் என இப்போது தெரிகிறது. மகள்கள் அணியும்போது தான் பேரழகாகிவிடுகின்றன அப்பாவின் சட்டைகள். சில நட்சத்திரங்கள் எப்போதாவது தோன்றுமாம்; அப்படித்தான் அந்த மழை மாலையில் எங்களுக்கான நட்சத்திரம் ஒளிர்ந்தது.

அந்தச்சிறுவனுக்கு என்னவோ திடீரென மழையில் நனைத்த அவன் உள்ளங்கைகளை அவள் இரு கன்னங்களிலும் வைத்தான். சிலிர்த்த அவள் அப்படியே அவன் கைகள் மீது தன் கைகளைப் போர்த்திக் கண்கள் சுருக்கிச் சிரித்தாள். ஒரு கணம் மழை நின்று வலுத்தது போலத் தோன்றியது. அவள் கன்னச்சூடும் இவன் கைக்குளிரும் ஒரே நேரத்தில் இடம் மாறின. அந்தச் சிரிப்பும் சிலிர்ப்பும் கொடுத்த உற்சாகத்தில் அவன் கைகளை மழைக்குக் காட்டி அவள் கன்னத்தில் வைக்க, மழை மறுபடியும் சிலிர்த்துக் கொண்டது.

இந்த மழை விளையாட்டு பொழிந்து கொண்டிருந்த போது, ஜன்னலுக்குள்ளிருந்து ”பவானீ….” என்ற குரலுக்கு ஓடியவள் உள்ளே போகும்முன் ஒரு கை மழையை அள்ளி என் மீது தூறிப் போனாள். இன்றும் என் நிலத்தை நனைத்தபடி பெய்து கொண்டிருக்கிறது அந்த மழை. அவள் கண்களின் சிரிப்பும் அந்தக் கன்னச்சூடும் இத்தனை வருடங்கள் கழித்தும் ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன.

மழை நீரில் புரளும் எத்தனையோ நினைவுகளுள் பவானி மழையும்….

உன்னோடு கொஞ்சம் பேசவேண்டும்,
நீ உன் திசையில் எங்கோ இருக்கிறாய்
ஆனாலும்….

சுய இரக்கம் அடர்ந்திருக்கும்
என் மதுக்குவளை
கைகளால் ஏந்தவியலாக் கணத்துடனிருக்கிறது.

அந்தரத்தில் அறுந்து தொங்குகின்றன
என் இரவுகள்.

தனிமையின் சுவர்கள் முழுவதும்
நம் உரையாடலைக் கிறுக்கியபடியிருக்கிறேன்.

என் அறையின் இசையில்
பெருகும் உன் வாசனை
இறுக்கிக் கொல்கிறது என்னை.

பிம்பங்களற்ற வெளியில் நிலைத்த கண்களில்
கணன்று கொண்டிருக்கின்றன.
உன் விரல் கோர்த்திருந்த நாட்கள்.

இந்த அனுதின வாதை விலக்க
உனதருகாமை வெப்பம் தவிர்த்து
வேறேதும் மீட்பில்லை.

மருந்தில் நனைத்தெடுத்த
மயிற்பீலிகளையெல்லாம்
நீ
தூர எறிந்துவிட்டாய் எனத்தெரியும்.
இருந்தாலும்
இந்த இரவுகளைக்
கடந்து செல்வதற்காக மட்டுமாவது
பேசவேண்டும் உன்னோடு.

-சுப. முத்துக்குமார்

விடுமுறையில்
காதலியை ரயிலேற்றிவிடும்
மெல்லிய கணத்தோடு
குடித்து முடித்த மதுப்புட்டிகளை
என் வீட்டின் வெளியே வைக்கிறேன்.
ஒரு கொண்டாட்டம்,
சில இரத்தச் சிதறல்,
சில கவிதைகள், முதல் சோரம்,
சில கண்ணீர்த்துளிகள்,
ஒரு கொலை, காமத்தெறிப்பு,
முதல் முத்தம், ஒரு துரோகம்
என
எதோ ஒன்றினால்
மீள் நிரப்புச் செய்யப்படும்
அவை,
விற்பனை அடுக்குகளில் காத்திருக்கக்கூடும்,
எனக்காகவும்
உங்களுக்காகவும்.

சுப. முத்துக்குமார்

விடுவிக்கவியலாத சில கதைகள்,
பெளா்ணமிக் கடலாய்
அவளும் அவளுடனான நிமிடங்களும்,
கட்டுக்களைக் கரைத்துவிட்ட
சிறுபோதை,
இதமான சூட்டில் இளையராஜா.
ஒரு கொலையோ சுயகொலையோ
நிகழந்திடக்கூடிய சாத்தியங்களுடன்
இரவின் மாயக்குகைக்குள்
நடந்து கொண்டிருக்கும்
இவன் வழியில்
கொலைக் கருவிகள் ஏதும்
இல்லாதிருத்தல் நலம்


சுப. முத்துக்குமாா்

கறிக்குழம்புக்கான ஆசையும், கறி தின்றுவிட்டு பல்லில் சிக்கிக்கொண்ட கறித்துண்டை எடுப்பதற்கான முயற்சிகளும் நிறைந்ததுதான் ஞாயிற்றுக் கிழமை. வாழ்க்கையும் கூட ஏறக்குறைய இப்படித்தான்.
Wait while more posts are being loaded